திருவாய்மொழிப் பாசுரங்களின் சிறப்பு - TVM1
வந்தாய் போலே வாராதாய். வாரா தாய்போல் வருவானே,
செந்தா மரைக்கண் செங்கனிவாய் நால்தோ ளமுதே. எனதுயிரே,
சிந்தா மணிகள் பகரல்லைப் பகல்செய் திருவேங் கடத்தானே,
அந்தோ! அடியேன் உன்பாதம் அகல கில்லேன் இறையுமே.
வருவாய் என எண்ணும்போது வரமாட்டாய், வரமாட்டாய் என எண்ணும்போது வந்தருள்வாய்! தாமரை போன்ற கண்களும், சிவந்த இதழ்கள் கூடிய வாயும், அகண்ட தோள்களும் கொண்ட என் உயிருக்கு ஒப்பானவனே! இருள் போன்ற என் அல்லல்களையும், பாவங்களையும் துடைக்கும் ஒளியான வேங்கடேசப் பெருமானே! நான் உன் பாதங்களை விட்டுப் பிரியாமல் இருக்கும் நிலையை வேண்டினேன் ஐயனே!
*************************
அகல கில்லேன் இறையும் என் றலர்மேல் மங்கை யுறைமார்பா,
நிகரில் புகழாய். உலகமூன் றுடையாய். என்னை ஆள்வானே,
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே,
புகலொன் றில்லா அடியேனுன் அடிக்கீழமர்ந்து புகுந்தேனே.
அலர்மேல் மங்கை எனும் இலக்குமி குடி கொண்டிருக்கும் திருமார்பனே! உன்னை விட்டு பிரியா நிலை வேண்டினேன். வானுலகம், பூமி, பாதாளம் ஆகிய மூன்று உலகங்களுக்கு அதிபதியே! என் அரசனே! தேவர்களும், முனிவர்களும் நேசிக்கும் திருவேங்கடம் வாழ் பெருமானே! உன் திருவடியைத் தவிர வேறொரு புகலிடமும் இல்லாத நான், உன்னிடம் தஞ்சமடைந்தேனே!
***********************************
பெருமான் எங்கிருக்கிறான், எப்படிப்பட்டவன் என்ற கேள்விக்கு, நம்மாழ்வார் பதிலாக வழங்கியது போல் உள்ளது இப்பாசுரம்:
உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்.
உளன் அலன் எனில் அலன் அவன் அருவமிவ்வருவுகள்
உளனென இலனென அவைகுணமுடைமையில்
உளன் இரு தகைமையோடு ஓழிவிலன் பரந்தே
அவன் இருக்கிறான் என்பவர்க்கு உருவமான ஸ்தூல சரீரமாகவும், அவன் இல்லையென்பார்க்கு அருவமான சூட்சும சரீரமாகவும் இரு வகைப்பட்ட தன்மைகளை உடையவனாக அந்த பரந்தாமன் இருப்பதால், என்றும் (Eternal) எங்கும் வியாபித்து (all pervading) இருக்கும் நிலை கொண்டவன் அவனே !
********************************
எளிமை தான் நம்மாழ்வரின் வழி:
அற்றது பற்றெனில்
உற்றது வீடு உயிர்
செற்றது மன்னுறில்
அற்றிறை பற்றே
பற்றை ஒழித்தால், ஆன்மா உய்வுறும். உலக பந்தங்கள் அனைத்தையும் விட்டொழித்து, அவ்விறைவனின் திருவடி சேர்க !
******************************
நாராயணன் தான் சகலமும் என்கிறது இப்பாசுரம்:
ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா
அன்று நான்முகன் தன்னோடு தேவர் உலகோடு உயிர் படைத்தான்
குன்றம் போல் மணி மாடம் நீடு திருக்குருகூர் அதனுள்
நின்ற ஆதிப் பிரான் நிற்க மற்றைத் தெய்வம் நாடுதிரே
தேவரும், உலகங்களும், மன்னுயிர்களும் மற்றும் எதுவுமே தோன்றாத காலத்தே, பிரம்மனையும், தேவர்களையும், உலகங்களையும், உயிர்களையும் படைத்தவன் அப்பரந்தாமனே ஆவான். குன்றுகளை ஒத்த அழகிய மாடங்கள் உடைய திருக்குருகூரில் எழுந்தருளியிருக்கும் ஆதிநாதனைத் தவிர வேறெந்த கடவுளரையும் நாட வேண்டியதில்லை !
****************************
இப்பாசுரத்தில், நம்மாழ்வார் கலியுக மாந்தர்க்கு மிகுந்த நம்பிக்கையளிக்கிறார் !
பொலிக! பொலிக! பொலிக! போயிற்று வல்லுயிர்ச் சாபம்,
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை,
கலியும் கெடும் கண்டு கொள்மின் கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்,
மலியப் புகுந்து இசைபாடி ஆடி உழிதரக் கண்டோம்
கொடிய சாபங்கள் நீங்கி விட்டதால், மகிழ்ச்சி கொள்க ! நரகத்தை ஆளும் யமனுக்கு இங்கே வேலையில்லை ! கடல்வண்ணனான பரந்தாமனின் உறைவிடமான வைகுந்தத்தில் உள்ள பூதகணங்கள், மனித உருவெடுத்து, இப்பூவுலகிற்கு வந்து, தங்கள் நிலை மறந்த பேருவகையில் (ecstasy) அப்பரந்தாமனை போற்றிப் பாடியாடுவதைக் காண்கையில், இக்கலியும், அல்லல்களும் முடிவுறும் என்பதை உணர்க !
*****************************
கீழ்க்கண்ட திருப்பாசுரங்களில் காணப்படும் பக்திப் பேருவகையும், பூரண சரணாகதியும், வாசிப்பவரின் உள்ளத்தை உருக்க வல்லது !
எனதாவியுள் கலந்த* பெருநல்லுதவிக்கைம்மாறு,*
எனதாவி தந்தொழிந்தேன்* இனிமீள்வதென்பது உண்டே,*
எனதாவியாவியும் நீ* பொழிலேழும் உண்ட எந்தாய்,*
எனதாவியார் யான் ஆர்?* தந்த நீ கொண்டாக்கினையே. 2.3.4
என் உயிரில் ஒன்றறக் கலந்து, நீ அருளிச் செய்த அரியதோர் உதவிக்கு பதிலாக என்னுயிரை உனக்குரியது ஆக்கினேன், ஐயனே ! அவ்வாறு என்னுயிரை ஈந்த பின்னர் உன்னிடமிருந்து யான் விலகுவதோ, மீள்வதோ இயலாத காரியம் ஆயிற்றே ! என் ஆன்மாவின் வித்தாக இருப்பவனும் நீயே ! பிரளய காலத்தில், ஏழு வகைப்பட்ட உலகங்களைக் காக்க வேண்டி அவற்றை உன் திருவயிற்றில் வைத்து ரட்சித்த உனக்கு, நீ கொடுத்த என்னுயிரை உனக்கே திருப்பித் தர நான் யார் ? கொடுத்த என் சுவாமி நீயே அதை உனதாக்கிக் கொண்டு என்னை உய்வுற வைத்தாய் !
******************
தானோர் உருவே தனிவித்தாய்த்
தன்னின் மூவர் முதலாய
வானோர் பலரும் முனிவரும்
மற்றும் மற்றும் முற்றுமாய்த்
தானோர் பெருநீர் தன்னுள்ளே
தோற்றி அதனுள் கண்வளரும்
வானோர் பெருமான் மாமாயன்
வைகுந்தன் எம் பெருமானே
ஆதிபிரானே நாம் காணும் உணரும் அனைத்துக்கும் முதற்காரணனாய், துணைக்காரணனாய், நிமித்த காரணனாய் திகழ்கிறான். தானே பிரம்மன், ஈசன், இந்திரன் ஆகிய மூவராகி, அதன் மூலம் தேவர்களையும், முனிவர்களையும், மற்றும் மனிதர்களையும், விலங்குகளையும், ஏனைய அசையும் மற்றும் அசையாப் பொருட்களையும் படைப்பிக்க வேண்டி ஓர் பிரளய வெள்ளத்தை உருவாக்கி, அதில் யோக நித்திரையில் ஆழ்ந்திருப்பவன் ! நித்யசூரிகளின் தலைவனான, எம்பெருமான் உணர்வதற்கரிய, அதிசயமான குணங்களை உடையவன் ! அப்பெருமானே பேரின்ப வீடான பரமபதத்தின் நாயகனும் ஆவான் !
******************
என்னுள் கலந்தவன் செங்கனிவாய் செங்கமலம்
மின்னும் சுடர்மலைக்குக் கண், பாதம், கை கமலம்
மன்னும் முழுஏழ் உலகும் வயிற்றின் உள
தன்னுள் கலவாதது எப்பொருளும் தான் இலையே
என்னுயிரில் கலந்து என்னை ஆட்கொண்ட எம்பெருமான் பேரொளி வீசும் பெருமலை போன்றவன் ! அவனது அழகிய சிவந்த உதடுகள், திருக்கண்கள், திருக்கைகள் மற்றும் திருவடிகள் யாவும் தாமரை மலர் போன்றவையே ! ஏழு உலகங்களையும் அவன் திருவயிற்றில் வைத்து ரட்சித்து, அவனே யாதுமாகி நிற்பதால், அவனுள் கலவாத, அவனுக்கு அப்பாற்பட்ட, பொருள் என்பதே கிடையாது !
**********************
என்றென்றும் அன்புடன்
பாலா
### 258 ###
12 மறுமொழிகள்:
Test !
நவ மணிகளாய் ஒன்பது திருவாய்மொழிகளைத் தொடுத்துத் தந்த பாலா, மிக மிக நன்றி!
//புகலொன் றில்லா அடியேனுன்//
வேறு வழி ஒன்றுமே இல்லை என்ற முடிவுக்கு வந்து விட்டார் ஆழ்வார்! வேறு எங்கும் புகலே எனக்கு இல்லை, என்று வெளிப்படையாக ஒப்புக் கொள்ள எவ்வளவு மனத் துணிவும் தெளிவும் அன்பும் வேண்டும்? திரெளபதியின் நிலை போல் அல்லவா ஆகி விட்டது?
எல்லா வழிகளும் ஒன்றும் இல்லை என்று ஆகி, தான் இருக்கும் நிலையே மறந்து "பரந்தாமா" என்று கைகூப்பினாளே! அதையே தான் ஆழ்வார் இங்கும் குறிக்கிறார்!
//அகல கில்லேன் இறையும் என் றலர்மேல் மங்கை யுறைமார்பா//
அன்னையை முன்னிட்டு, ஸ்ரீ சம்பந்தமாகச் செய்யும் சரணாகதி இது!
ஸ்ரீயைப் பற்றி, ஸ்ரீயப் பதியைச் சரண் புகுகிறார் ஆழ்வார்.
"புருஷகாரம்" என்று சொல்லப்படுவது!
அலர்மேல் மங்கை உறை மார்பா என்று பாடிவிட்டுச் சென்று இருக்கலாம்; ஆனால் "அகலகில்லேன் இறையும்" என்று ஏன் பாட வேண்டும்?
எம்பெருமானை விட்டு அணுப்பொழுதும் நீங்க மாட்டேன் என்று தாயார் உலகுக்குச் சத்தியப் பரமாணம் செய்கிறாள்! ஏன்?
அடியார்களே,
பாவங்கள் பல செய்திருந்தாலும், பயமின்றி எம்பெருமானிடம் வாருங்கள்! ஓறுப்பானோ என்று அஞ்ச வேண்டாம்; அவனை விட்டு அகலாது நான் தான் இருக்கிறேன் அல்லவா? அப்படி இருக்க, இன்னும் என்ன உங்களுக்குப் பயம்? சரணாகதி செய்ய இது ஒரு தடையா? நான் இருக்கிறேன்; வந்து எம்பெருமானைத் தஞ்சம் புகுங்கள்! என்று நம் அனைவருக்கும் அருள் செய்ய, அன்னை காத்து இருக்கிறாள்!
பாடலை ஊன்றிக் கவனித்தால், த்வய மந்திரம் என்று சொல்லப்படும் முக்கியமான மந்திரப் பதங்கள் ஒவ்வொரு தமிழ்ச் சொல்லுக்குப் பொருந்தும்! பின்னர் சொல்கிறேன்!!
//நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே//
வணங்கும் திருவேங் கடத்தானே என்று சொல்ல வில்லை; "விரும்பும்" என்கிறார்!
தரிசனம் சரியாகக் கிடைக்குதோ இல்லையோ, மீண்டும் மீண்டும், மனம் அவன் பால் செல்லும் ரகசியம் இது தான் போலும்! இப்படி அமரர், அசுரர், முனிவர், மக்கள் என்று எல்லாரும் "விரும்பும்" நாயகனாய் விளங்குகின்றான்!
நன்றி பாலா,
பொலிக! பொலிக! பொலிக! தங்கள் திருவாய்மொழிப் பதிவுகளும் பொலிக!!
திருவாய்மொழிப்பாசுரங்கள் அனைத்துமே தேன். அவற்றில் நீங்கள் தேர்ந்தெடுத்து இங்கே இட்டிருப்பவை கொம்புத் தேன். மிக்க சுவையாக இருக்கிறது.
இதோ வீட்டில் மதிய உணவுண்ண அழைக்கிறார்கள். பசியில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
//உளன் எனில் உளன் அவன்!
உளன் அலன் எனில் அலன் !
//
இதை அறியா மாந்தரிடம்தான் எத்தனை எத்தனை குழப்பங்கள்!
திருவாய்மொழி படிக்க கேட்க பாட கொடுத்துவைத்திருக்க வேண்டும்.
அகலகில்லேன்..பாசுரம் சாற்றுமுறையில் சொல்லி முடிக்கும்போது அதன் பொருள் தெரிந்தவர்க்குக் கண்பனிக்கும்.
'அவரவர் தமதமது அறிவறிவகை வகை
அவரவரிறையவர் என் அடியடைவர்கள்
அவரவரிறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதிவழி அடைய நின்றனரே.'
நம்மாழ்வார்.
நன்றாக எழுதுகிறீர்கள் பாலா!
ஷைலஜா
கண்ணபிரான்,
அற்புதமான ஒரு பின்னூட்டத்திற்கு நன்றி !
//அன்னையை முன்னிட்டு, ஸ்ரீ சம்பந்தமாகச் செய்யும் சரணாகதி இது!
ஸ்ரீயைப் பற்றி, ஸ்ரீயப் பதியைச் சரண் புகுகிறார் ஆழ்வார்.
//
நல்லதொரு விளக்கம் !
"அகலகில்லேன்" பாசுரத்தில் இரண்டு குறிப்புகள்:
1. நீங்கள் கூறிய "முனிக்கணங்கள் விரும்பும்" ('வேண்டும்' என்று கூறாமல்) என்று குறிப்பிட்டிருப்பது, பரமனை நேசித்தாலே போது, அவனை உயரத்தில் வைத்து போற்றிப் பாடவெல்லாம் அவசியமில்லை என்று, அதாவது, அடியார்களுக்கு எளிமையானவனாக சித்தரிப்பதாகவே உணர்ந்து கொள்கிறேன் !
2. "அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே" என்பது, இரண்டு நிலைகளை குறிப்பது, அவன் திருவடியைப் பற்றுவது மற்றும் அவனுடன் ஒன்றறக் கலப்பது !
ஏதோ சிறியேனுக்கு எட்டியது இவை இரண்டும் :)
//பொலிக! பொலிக! பொலிக! தங்கள் திருவாய்மொழிப் பதிவுகளும் பொலிக!!
//
பொலியத் தான் போகிறேன் :)))
என்றென்றும் அன்புடன்
பாலா
ஜீவா,
//உளன் எனில் உளன் அவன்!
உளன் அலன் எனில் அலன் !
//
கரெக்டா ஆஜராயி, கரெக்டானதை பிடிச்சுட்டீங்க !
என்றென்றும் அன்புடன்
பாலா
ஷைலஜா,
//நன்றாக எழுதுகிறீர்கள் பாலா!
//
முதல் வருகைக்கு நன்றி.
நீங்கள் பாசுரத்தை தட்டச்சியதில் சிறிய பிழை, பாசுரம் கீழே:
அவரவர் தமதமது அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் எனவடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதிவழி அடையநின்றனரே.
என்றென்றும் அன்புடன்
பாலா
குமரன்,
//திருவாய்மொழிப்பாசுரங்கள் அனைத்துமே தேன். அவற்றில் நீங்கள் தேர்ந்தெடுத்து இங்கே இட்டிருப்பவை கொம்புத் தேன். மிக்க சுவையாக இருக்கிறது.
//
தன்யனானேன் சுவாமி, வாசிப்புக்கு நன்றி :)
என்றென்றும் அன்புடன்
பாலா
Test !
இன்று தான் இதை முழுவதும் படிக்க முடிந்தது. என் அப்பாவிற்கு பிடித்த பாசுரங்களை சொல்லியிருக்கிறீர்கள். ( ஷைலஜா சொன்ன பாசுரமும் என் ஆப்பாவை நினைவு படுத்தியது)
தொடருங்கள்.
( நான் இந்த மார்கழி எல்லா ஆழ்வார்களையும் கொஞ்சம் தொட்டு பார்க்கலாம் என்று இருக்கிறேன்)
Thanks, Desikan !
தங்கள் அப்பாவை நினைவுபடுத்த முடிந்ததற்கு மிக்க சந்தோஷம்.
Post a Comment